ஆசிரியர் எழுதியுள்ள பல புத்தகங்களை, வரிசைக் கிரமமாகப் படித்தாலும், ஆங்காங்கே இடைச் செருகலாய் படித்தாலும், ஒன்றைத் திறந்து வைத்து மற்றொன்றைப் படித்தாலும், அச்சு பிசகாமல், அர்த்தம் மாறாமல், பிறவி குறித்தும், மனம் குறித்தும், ஆழ் மனம் குறித்தும் அழகாய் விளக்கி விடுவார்.
அறிவியல் மூலம் ஆன்மிகத்தைத் தேடி, ‘நான் யார்’ என்ற கேள்விக்கு, ‘இது தான்யா நீ...’ என்ற பதிலை அறிவுப்பூர்வமாய், அழகாக விளக்கிச் சொல்கிறார். மனம், ஆழ் மனம் ஆகியவற்றை அழகாக விளக்கி, கர்ம மூட்டைகள் குறித்தும், நாம் பிறவி எடுப்பது ஏன் என்பது குறித்தும், ‘மூட்டை மூட்டை’யாக விளக்குகிறார் இந்தப் புத்தகத்தில். பாவம், புண்ணியங்கள் வழியே, நாம் நிர்ணயிக்கும் வாழ்வும், எண்ணங்களும் நமக்கு அமைகின்றன என்பதை எடுத்துரைக்கிறார். உயிர் என்றால் என்ன, ஜீவன் யார், மனதைப் பக்குவப்படுத்துவது எப்படி என்று, ஒரு குழந்தைக்குச் சொல்வதைப் போல எடுத்துச் சொல்கிறார்.
மனம், குழந்தை பருவந்தொட்டு சேர்ந்து வளர்கிறது; ஆழ் மனம், பிறவிகள்தோறும் தொடர்ந்து வருகிறது என விளக்குகிறார். பசு, தென்னை போல, பிறருக்கு மட்டுமே உதவும் வகையில் இருப்பன மட்டுமே, மிக அற்புதமான மனிதப் பிறவியை அடைகின்றன என்கிறார். மேலும், ‘நம் கர்ம மூட்டைகளின் படியே, அது சொல்லும் பிறவியை நாம் எடுக்கிறோம் என்றும், நாம் அன்றாடம், நிமிடத்திற்கு நிமிடம் செய்யும் செயல்கள் வழியே, மேலும் பல மூட்டைகள் உருவாகி, ஆழ் மனதில் வரிசைக் கட்டி நிற்கின்றன;
கோடானு கோடி மூட்டைகளை நாம் சுமக்கிறோம். கடலுக்கடியில் சென்றாலும், வானில் பறந்தாலும், எங்கு சென்றாலும் நம்முடனேயே, கலர் கலராய் அவை நம்மைச் சுற்றியபடி, நம்முடனேயே வருகின்றன’ என்கிறார். இது தான், ‘ஆரா’ எனப்படுகிறது என்ற பேருண்மையை அவர் எடுத்துரைக்கும்போது, வயிற்றிலிருந்து ஒரு பந்து, தொண்டையில் வந்து நிற்கிறது.
வாழ்க்கையில் எவ்வளவு ஆட்டம் போட்டாலும், நாம் தான் இந்த உலகிலேயே சிறந்தவன் என்ற எண்ணம் கொண்டாலும், ஏதாவது ஒரு கட்டத்தில், எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்ற கேள்வி, ஒவ்வொருவர் மனதிலும் எழாமல் இருக்காது. அந்த சந்தேகத்துக்கான விடையையும் சேர்த்து, மனதைச் செம்மைப்படுத்தும் வழியைக் கற்றுத் தருகிறார்.
– பானுமதி