பரதக் கலை சார்ந்த நாவல். கலைக்காக எதையும் செய்யத் துணியும் மூன்று அன்பு உள்ளங்களை மையப்படுத்தி செல்கிறது.
பணம் படைத்தோர் உண்மையான அன்போடு உதவுவதும், இக்காலத்தில் சந்தேகக் கண் கொண்டே பார்க்கப்படுகிறது. ஆனால், அந்தச் சந்தேகம், அன்பின் முன் தோற்றுப் போகிறது. ஏழ்மையில் உள்ளோரை உயர்த்த உதவுபவர், அந்த ஏழைக்குக் கடவுளாகவே காட்சி அளிப்பார். அக்கடவுளுக்காக அவர் எதையும் செய்யத் துணிவார். இப்படிப்பட்ட நாயகி தான் இக்கதையின் ரஞ்சிதா. சாதாரண நிலையிலான அவளை வாழ்வில் உயர்த்திய இரு அன்பு உள்ளங்களுக்குத் தன் நன்றியை, அன்பை வெளிக்காட்டிய விதமே இந்நாவலின் உச்சம்.
காட்டாற்று வெள்ளம் போன்ற நாவலின் நடை, எங்கும் நிற்கவிடாது நம் மனதையும் அடித்துச் சென்று விடுகிறது. படிப்பவரது உள்ளங்களில் அன்பை விதைத்துச் செல்லும் என்பது உறுதி.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேல்