உடுமலை என்ற ஊரைப் பற்றிய தகவல்கள் நிரம்பிய நுால். அவ்வூரின் பல்வேறு பெருமைகளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஊர் வளர்ந்த வரலாறு பற்றிய குறிப்பிடத்தக்க செய்திகளைத் தொகுத்து வழங்கியுள்ளது. மலைகளின் ஊடே இருப்பதால் உடுமலை. உடு என்பது விண்மீனைக் குறிக்கும். எத்திசையில் இருந்து வந்தாலும் விண்மீன் தென்மலைக்கு அடையாளமாக இருந்து வருவதால், உடுமலை என்ற பெயர் பூண்டதாகச் சொல்லப்படுகிறது.
சங்க காலத்தில் உதியன் மரபினர் ஆண்டதான குறிப்புண்டு. அங்கு கிடைத்த காசுகளும், தாழிகளும், நடுகற்களும், கல்வெட்டுகளும் தொன்மையைக் கூறும். அங்குள்ள அயிரை மலையான ஐவர் மலையில் சமணப் பள்ளிகளும், குடைவரைக் கோவில்களும், தீர்த்தங்கர் சிலைகளும் பழம்பெருமைக்குச் சான்று.
ஊரில் நடைபெறும் சடங்குகள், வழிபாடுகளை விரிவாக விளக்குகிறது. உடுமலையின் நகர விரிவாக்கத் திட்டங்களும், வளர்ச்சிக்கு வித்திட்ட தலைவர்கள் பற்றிய சுருக்கமான வரலாறும் உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் உடுமலை நாராயண கவி, இலக்கியவாதிகள் பற்றிய செய்திகள், அரசியல் தலைவர்களின் வரலாறு, விடுதலைப் போராட்ட வரலாறு, விவசாயிகள் போராட்டம், நீர் மேலாண்மை, உடுமலையில் வாழ்ந்த கலைத்துறை சார்ந்தவர்கள் பற்றி அறிந்து கொள்ள ஆவணமாகத் திகழும் நுால்.
– ராம.குருநாதன்