அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தருக்கு சிவஞான போதப் பொருளை ஓதி எடுத்துரைத்து வந்ததே சிவஞான சித்தியார். இதில் அடங்கிய பரபக்கம், சுபக்கம் எனும் இரு பகுதிகளில், சித்தாந்தப் பார்வையால் சைவக் கோட்பாடு உண்மைகளைப் புலப்படுத்தும் செய்யுள்களால் அமைந்ததே சுபக்கம். சுபக்கம் என்றால், ‘தன் பக்கம்’ என்பதாகப் பொருள் கூறப்படுகிறது.
சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு எழுதப்பட்ட பல உரைகள் இருப்பினும், பல ஆய்வு விளக்கங்களோடு அமைந்த இந்த உரை நுாலில், சிவஞான யோகியின் கருத்தின் வழியில், ‘கொண்டு கூட்டு’ தனித்தனியே தந்து, பொழிப்புரையும், பதவுரையும் தரப்பட்டுள்ளன.
முதல் ஆறு சூத்திரங்கள் பொதுவதிகாரம் எனவும், அடுத்த ஆறு சூத்திரங்கள் சிறப்பதிகாரம் எனவும், இவை ஒவ்வொன்றிலும் மூன்று சூத்திரங்கள் கொண்ட இயல்களாகப் பகுக்கப்பட்டு பிரமாணவியல், இலக்கணவியல், சாதனவியல், பயனியல் எனும் தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன.
சூத்திரங்களும், அதிகரணங்களும் உள்ளடக்கி இறையின் தன்மை, சிறப்பியல்பு, ஆற்றல், இயக்கம் எனப் பலவும் துலக்கிச் சொல்லப்பட்டுள்ளன.
– மெய்ஞானி பிரபாகரபாபு