திருக்கோவில் வரலாறுகள் திரித்துக் கூறப்பட்டதைச் சுட்டி, கல்வெட்டு, சிற்பம், செப்பேடு துணை கொண்டு உண்மை வரலாற்று செய்திகளை பதிவுசெய்து வெளிவந்திருக்கும் நுால். பட்டீச்சரம், திருவையாறு, சித்தாய்மூர், மருதுார், கும்பகோணம், திருவாரூர், திருவண்ணாமலை, கோயிலடி, உஞ்சினி, திருவரங்கம், தாராசுரம், ஆவூர், திருவிசநல்லுார், திருவிடைமருதுார், தில்லை, திருக்கோவிலுார், செந்தலை, மேல ஆர்க்காடு, தஞ்சாவூர், திரிபுவனம், பாகமண்டலா, திருவாலங்காடு, கங்கை கொண்ட சோழீச்சரம், திருப்பாலத்துறை, வல்லம், நியமம், திருவாதவூர், கூகூர் ஆகிய, 28 தலங்களின் விரிவான கலை வரலாறுகள் அடங்கியுள்ளது.
ஆழ்வார்கள் மற்றும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களின் விபரங்கள் துலக்கமாகத் தரப்பட்டுள்ளன. கோவில்களின் பெயர்க் காரணங்களோடு வரலாறும் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது.
அழகிய கோவில்களுக்குப் பின்னணியில் பொதிந்துள்ள அரிய தலச்செய்திகள், வரலாற்று நிகழ்வுகள், மன்னராட்சி விபரங்கள், பண்பாட்டுத்தகவல்கள் வியப்பைத் தருகின்றன. அழியாத கல்லெழுத்துச் சாசனங்களால் பண்டைய கோவில் சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் அழகியலையும், நெடிய வரலாற்றையும் காட்சிப்படுத்தியுள்ளார்.
கூலிப்பிச்சை, வட்டிப்பணத்துக்காக சந்தி விளக்கு எரித்தது, பிட்டுக்கு மண் சுமந்தது, திருஞான சம்பந்தருக்குக் கொடையாக அளிக்கப்பட முத்துப்பந்தல், கல்வெட்டுச் சாசனப்படி நிறைவேற்றப்பட்ட ஆணைகளால் நடந்த நிகழ்வுகள், ராஜராஜ சோழனின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்துக்காக ஊரார் அளித்த கொடைகள் போன்ற தகவல்கள் வரலாறுச் சான்றுகளோடு முன்வைக்கப்பட்டுள்ளன.
சங்ககால சோழராட்சிக்குப் பின், சோழர் தலைநகரங்கள் பற்றிய விபரங்கள், கோவில்களின் கருவறைகளில் உள்ள மூலவர் மற்றும் வெளிப்புறச் சிலைகளின் பின்னணி கதைகள், தஞ்சை நாயக்க மன்னர்கள் காலத்தில் கோவில் மண்டபங்களிலும் விதானங்களிலும், தீட்டப்பட்ட பல ஓவியங்கள் தொடர்ந்து நடந்த திருப்பணிகளால் சிதைவுண்ட தகவல்கள், நிழற்படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன.
வழிபாட்டுத் தலங்கள் கூறும் சுவையான வரலாற்றுத் தகவல்கள் மற்றும் குறிப்புகள் பண்டைய நுாற்றாண்டுகளுக்கே இட்டுச் செல்கின்றன. அறிவு நோக்கிலும் ஆய்வு நோக்கிலும் படிக்க வேண்டிய பயனுள்ள நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு