ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட சிவகங்கைச் சீமையின் வரலாற்றை – குறிப்பாக நாடு கடத்தப்பட்ட போராளிகளைப் பற்றியது இந்த நுால். கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்துப் போராளிகளை எல்லா வகைகளிலும் ஒடுக்கியும், கொன்று குவித்தும், நாடு கடத்தியும் செயல்பட்ட நிகழ்வுகளை வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கிறது. சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையண்ணத் தேவர் உள்ளிட்ட 73 போராட்ட வீரர்களைக் குற்றவாளிகளாகக் கருதி காலா பாணியாக ஆக்கிய கதையை விளக்குகிறது.
காலா பாணி என்ற சொல்லுக்குக் கறுப்புத் தண்ணீர் என்று பொருள். குற்றஞ்சாட்டப் பட்டவர்களை நாடு கடத்தித் தொலைதுாரத்திற்கு அப்பால் இறக்கிவிடுவது தான் காலா பாணி என்று அழைக்கப்பட்டது.
நாடு கடத்தப்பட்டவர்களின் துயரத்தை வரலாற்றின் சுவடுகளிலிருந்து உணர்த்துகிறார் நாவலாசிரியர். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் நுழைந்து இந்திய அரசர்களிடம் நட்பும், பகையுமாக ஆதிக்கத்தை நிலைநிறுத்திய 18, 19ம் நுாற்றாண்டு காலத்திய பின்னணியைக் காட்டுகிறது.
ஆங்கிலேயரின் ஆட்சி முறை, அவர்கள் மேற்கொண்ட வணிகம், தென்கிழக்காசிய நாகரிகப் பண்பாடு, குற்றம் புரிந்தோரை நாடு கடத்திய சூழல், குற்றமிழைக்கப்பட்டோர் அதை எதிர்கொண்ட முறை முதலானவை கதைக்களத்திற்குரிய நிகழ்வுகள். கடற்பயணத்தினுாடே குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நினைவலைகளை முன்னும் பின்னுமாகக் காட்டியிருப்பது, நாவலுக்குரிய உத்தி முறையைக் காட்டுகிறது.
ஆங்கில அதிகாரிகளான வெல்லெஸ்லி, கிளைவ், அக்னியூ, வெல்ஷ், லெப்டினெட் ராக்கெட், வில்லியம் லெயித் போன்றோரின் நடவடிக்கைகள், அவர்களின் அணுகுமுறை போன்ற வரலாற்றுச் செய்திகள் நாவலை இயக்குகிறது. கட்டாயம் படிக்க வேண்டிய நுால்.
– ராம.குருநாதன்