காலத்தால் அழியாத கவித் தென்றல் கண்ணதாசன். இவரின் திரைப் பாடல்கள் கேட்டு மனம் கரையாதவரே இருக்கமாட்டார்கள். அவர் திரைக்கதை சூழலுக்கு ஏற்ப பாடல்கள் எழுதுவது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அப்பாடல்கள் எழுந்த வீட்டுச் சூழலை வெகு அற்புதமாய் அவர் மகன் எழுதியுள்ளார்.
கண்ணதாசனின் 13 பிள்ளைகளில், இந்த நுாலாசிரியர் அண்ணாதுரை மட்டுமே இளம் வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர். எனவே, அற்புதமான திரை அனுபவங்களால் கவிஞரை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கவிஞரது புலமையும், பண்பும், குணாதிசயங்களும், திரைமறைவு வாழ்வியல் நிகழ்வுகளும் வெளிப்படுகின்றன.
எம்.ஜி.ஆர்., தயாரித்த நாடோடி மன்னன் படத்துக்கு வசனம் எழுத வந்த வாய்ப்பை மறுத்து, பின் 15 காட்சிகளுக்கு மட்டும் எழுதித் தந்து சாதனை படைத்தது போன்ற தகவல்கள் நிறைந்துள்ளன. என்றென்றும் கண்ணதாசன் பாடல்கள் காற்றில் மிதந்து வந்து செவியை ஆக்கிரமிக்கும். இந்த நுாலைப் படித்த பின், மனதையும் ஆக்கிரமிக்கும்.
– முனைவர் மா.கி.ரமணன்