சமூக இயக்கத்தைக் கணித்து, பல்வேறு சிக்கல்களுக்கு விடை தேடும் முயற்சியாக அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். காவல் துறையில் உயர் பொறுப்பு வகித்தவரின் சமூக பார்வையும், பொறுப்புணர்வுள்ள கடமையும் வெளிப்பட்டுள்ளது.
மொத்தம், 29 கட்டுரைகள் உள்ளன. பெரும்பாலும், ‘தினமலர்’ நாளிதழ் சிந்தனைக்களம் பகுதியில் பிரசுரமானவை. தீயவர்களின் செயலால் மட்டுமே, சமுதாயம் கொடுமை அனுபவிப்பதில்லை; அவற்றை பார்த்தும் தட்டிக் கேட்கும் வாய்ப்பு இருந்தும், செயல்படாமல் இருக்கும் மெத்தனத்தால் தான், பல கொடுமைகள் நிகழ்கின்றன என, பொறுப்புக்கு இலக்கணம் வகுத்து துவங்குகிறது.
துணிவில்லாத அதிகாரிகளால் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள் என்ற தலைப்பில் முதல் கட்டுரை உள்ளது. இதில் அதிகாரிகளை மொத்தமாக குற்றம் சாட்டவில்லை; பிரச்னையின் கோணத்தை மிக துல்லியமாக அணுகி, மக்களுக்காகத்தான் சட்டம் இயற்றப்படுகிறது என்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஆணவம், அகங்காரம் போன்ற பண்புகளை கடைப்பிடித்தால் என்ன விளைவு ஏற்படும் என்பது குறித்து ஒரு கட்டுரை உள்ளது. பொருத்தமான, இடித்துரைக்கும் குறளுடன் இதை முடித்துள்ளார். அந்த பண்புகளால் மாட்டிவிடும் சிக்கல்கள் பற்றி இடித்துரைத்துள்ளார்.
புத்தியை தீட்டி செயல்பட அறிவுரைக்கும் கட்டுரை ஒன்றும் உள்ளது. குறிப்பாக வாலிபர்களை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது. சுருங்கிவிட்டதா சுயசிந்தனை என்றொரு ஆக்கம். மிகவும் பொறுப்புடன் எழுதப்பட்டுள்ளது. சுயமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதை நுட்பமாக வலியுறுத்துகிறது.
இதுபோல் சமூகத்தில் நிலவும் சிக்கல்களை விளக்கி, தீர்வு காண்பதற்கான சீரிய வழிமுறைகளை உள்ளடக்கிய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறார். காவல் துறையில் உயர் பொறுப்பு வகித்தவர் என்பதால், சமூக இழிவுகளை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு பெற்றவர் இந்த நூலாசிரியர். அவற்றை சட்டத்தின் மீது மட்டும் நின்று பார்க்காமல், அலசி ஆராய்ந்து தீர்வு தேடியுள்ளார்.
இந்த முயற்சி, கட்டுரைகளில் முற்றாக வெளிப்பட்டுள்ளது. எதையும் அலட்சியப்படுத்தாமல், நுட்பமாக ஆராய்ந்துள்ள நேர்மை, வாசிக்கும் போது அனுபவமாக கிடைக்கிறது. சமூகத்தின் பல நிலையிலும் சவால்களை சந்திப்போருக்கு நல் வழிகாட்டும் நுால்.
– மலர்