தலைப்பைப் பார்த்ததும், ‘சமஸ்கிருத வார்த்தையாச்சே... நமக்கு எங்கே புரியப் போகுது...’ என நினைத்து விட வேண்டாம். அத்தனை விளக்கங்களும் தமிழில் உள்ளன.
இனி புத்தகத்தில் எழுதியுள்ளதைப் பற்றி...
பானையைப் பார்க்கிறோம்; பானை என்பதாகவே நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. தங்கத்திலான நகையைப் பார்க்கிறோம்; நகை தான் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. வானத்தைப் பார்க்கிறோம்; நீல நிறமாகத் தெரிகிறது.
உண்மை என்ன... பானையைச் செய்ய பயன்படுத்தப்பட்ட களிமண் தான் பானையில் உள்ளது; நகையைச் செய்ய பயன்படும் தங்கம் தான், நகையில் உள்ளது; வானத்திற்கோ நிறமேதும் இல்லை.
அது போல, நம்மில் திகழ்வது பிரம்மமே; நம் உடலோ, மனமோ அல்ல என்கிறார்.
இந்த நிதர்சனத்தைப் புரிய வைக்கிறார் ஆதிசங்கரர். ‘உலகில் தன்னிகரற்ற ஒன்று உள்ளது; அது தான் பிரம்மம்’ என்பதை ‘அ + த்வைதம், அதாவது இரண்டு என்ற ஒன்று இல்லை; ஏக வஸ்து ஒன்று தான் உள்ளது; அது தான் நிலையானது’ என்ற கோட்பாட்டின் மூலம் புரிய வைக்கிறார். அவர் சொல்லிய வகையில், அவருடைய சுலோகங்களில், மிக மிக முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து, வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லி, நீண்ட விளக்கம் தருகிறார் ஆசிரியர்.
‘களிமண்ணைப் பானையாய் பார்க்கும் தன்மையை விடுங்கள்; தங்கத்தை நகையாய் பார்க்கும் தன்மையை விடுங்கள்; அது போல, உங்கள் உடலிலும், உலகில் உள்ள ஜீவராசிகளிலும் விளங்கும் பிரம்மத்தைப் புரிந்து கொள்ளுங்கள். களிமண்ணும், பானையும் ஒன்றாகத் திகழ்வது போல, ஜீவன்களும், பிரம்மமும் ஒன்றாகத் திகழ்கின்றன. அழியும் தன்மை கொண்டவனல்ல ஜீவன்; பிரம்மமாய், காலம் கடந்தவனாய் திகழ்கிறான்’ என்கிறார்.
பானை, நகை என ரூபங்கள் தெரிவது போல, செடி, கொடி, அமீபா, மனிதன் என, தனித் தனி ரூபங்களாய் பிரம்மம் தெரிகிறது என்பதை விளக்குகிறார்.
இந்த ரூபங்கள் அனைத்தும் பொய்யானவை, மித்தியா என்பதை ஆசிரியர் விளக்குகிறார். புத்தகத்தைப் படிக்கையில் அனைத்தும், புத்திக்கு எட்டும். அதை, ‘பரோக்ஷம்’ என்கிறோம். புத்தியில் விளங்கிக் கொண்டதை, சிந்தித்துச் சிந்தித்து, நாமே பிரம்மம் என்பதை விளங்கிக் கொள்வதை, ‘அபரோக்ஷம்’ என்கிறோம். பிரம்மமாய் திகழ்வதே, ‘அபரோக்ஷ அனுபூதி!’
இந்த பேருண்மையைப் புரிந்து கொண்டால், துன்பங்களைக் கடப்பது சுலபம்; இன்பங்களில் மூழ்கி பித்து பிடித்துத் திரிந்து, மீண்டும் துன்பத்தை அனுபவிக்கும்போது, ‘என்ன வாழ்க்கை இது...’ என்ற சலிப்பு ஏற்படாமல், சுக, துக்கங்களை சமமாய் பாவிக்கும் மனநிலை ஏற்பட்டு, ஆனந்தத்தை அடையலாம்.
– பானுமதி