தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் வறுமையான சூழலில் பிறந்தவர், உழைப்பை மட்டும் ஆதாரமாகக் கொண்டு, வியாபாரத்தின் மூலம் பொருள் ஈட்டி, பெருஞ்செல்வந்தராகியதை படிப்படியாக விவரிக்கும் அற்புத நுால்.
தவணை முறையில் பணம் வாங்கி, பொருள் விற்பனை முறையை அறிமுகப்படுத்தி, வியாபாரத்தில் வெற்றிவாகை சூடிய வி.ஜி.பி., நிறுவனர்களில் ஒருவர் வி.ஜி.பன்னீர்தாஸ். அவரது வாழ்க்கை போராட்டம் மற்றும் பொருளாதார வெற்றிகள் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு. கதை சொல்வது போல், வாழ்வின் தடத்தை விவரிக்கிறது.
கடித இலக்கிய பாணியில் எழுதப்பட்டுள்ளது. மொழிநடை தடங்கலின்றி வாசிக்க துாண்டுகிறது. பொருத்தமான இடங்களில் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கவித்துவம் நிறைந்த, ‘வறுமைக்கொடியில் மலர்ந்த மலர்கள்’ என்ற தலைப்பில் அமைந்த இயல், பிறந்த கிராமத்தையும், உறவுகளின் இணக்கத்தையும் விவரிக்கிறது.
வறுமை சூழலை விவரிக்கும், ‘பட்டணத்துக்கு பயணம்’ என்ற இயலில், ‘அரிசி என்பது அன்று பணக்காரர் வீட்டு உணவாக இருந்ததால், சோளம், காட்டுக்கிழங்கு போன்றவற்றை சாப்பிட்டுத் தான் வயிற்றை நிறைத்தோம்...’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுபோல் வறுமை நடைமுறை, புறக்கணிப்பு, பாதுகாப்பின்மை போன்றவற்றை தளர்வில்லாமல் எதிர்கொண்டு சாதகமாக்கியதை, புத்தகத்தின் பெரும்பகுதி எடுத்துக் காட்டுகிறது. பனை மரங்கள் நிறைந்த காட்டைக் காட்டும் படமும், பனை ஓலையை சுமக்கும் பரிதாப சிறுவன் போட்டோவும் வறுமையின் இயல்பை சுட்டுகின்றன.
வியாபார பின்னடைவுகளில் கற்றதை, சூழலுக்கு ஏற்ப சாதகமாக்கியதை எங்கும் காண முடிகிறது. இது முன்னேறத் துடிப்போருக்கு நல்ல படிப்பினை தரும். இதை ஆக்கியுள்ளவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம். புத்தகத்தில் சுட்டும் கதாநாயகனுடன் இணைந்து பயணித்தவர். இணையாக உழைத்து முன்னேற்றத்துக்கு அடிகோலிய அவரது வாழ்க்கையும் இந்த புத்தகத்தின் வழி துலங்குகிறது. தண்டவாளம் போல் இணைப் பயணமாக விளங்குகிறது.
புத்தகத்தில் உள்ள விவரிப்பு, பின்தங்கிய வாழ்வின் குமுறல்களை, உழைப்பின் அடுக்கமைவை, பொருளாதார முன்னேற்றத்தின் பாதையை துல்லியமாகக் காட்டுகிறது. முட்கள் மீது அழுந்த நடந்த பாதங்கள், மலர் மீது ஏறுவதை அனுபவமாக விவரிக்கும் நம்பிக்கை நுால்.
– மலர் அமுதன்