அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் போன்ற பொருட்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள் போன்ற அனைத்தையுமே முன்னோர் ஒரு அர்த்தத்துடன் தான் செய்து வந்திருக்கின்றனர். நம் பழக்க வழக்கங்களில் உள்ள அறிவியல் உண்மைகளை மறந்து விட்டு, வெறும் சடங்குகளாக பார்ப்பதால் உரிய முக்கியத்துவம் தர மறுக்கிறோம்.
இத்தகைய ஆன்மிக பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள அறவியல் ரகசியங்களை வெளிக் கொண்டு வரும் முயற்சி தான் இந்த புத்தகம். முப்பது சிறிய கட்டுரைகளை உள்ளடக்கியது; மருந்துப் பெட்டகமாக விளங்குகிறது. பொருளுக்கான பெயர்க் காரணம், அது விளைகிற பகுதி, அதன் பயன்படும் தன்மை, அதற்கு இலக்கியச் சான்றுகள், அயல்நாட்டார் குறிப்புகள், ஆயுர்வேதத் தன்மைகள், எம்முறையில் பயன்படுத்தச் சொல்கிறது என வரிசைப்படுத்தியுள்ளார்.
இத்தனை நாட்களாக இந்தப் பொருளைப் பார்த்திருக்கிறோம், பயன்படுத்தியிருக்கிறோம். இது இத்தனை அருமையுடையதா! இத்தனை மருத்துவ குணம் உடையதா என்றெல்லாம் எண்ண வைத்து திகைப்பில் ஆழ்த்துகிறார். மருத்துவ முறைகளும், அறுவை சிகிச்சையும் அன்றைக்கே இருந்திருக்கின்றன என்பதை அயல்நாட்டு அறிஞர்களின் குறிப்புகளாக எடுத்துரைத்திருக்கிறார்.
– இளங்கோவன்