‘கோமாவில் இருக்கானா... எல்லாம் சரியாய் போயிடும்’ என, உறவினர் உடல் நலம் குறித்து, சாமியார் யாராவது குறி சொன்னால் நம்பி விடுவீர்கள் அல்லவா? உண்மையிலேயே அவர் சரியாகி விட்டாரா? அந்த சாமியார் எதற்காக அப்படி சொன்னார்? கோமா என்றால் என்னவென்று அவருக்கு தெரியுமா அல்லது உங்களுக்கு தான் தெரியுமா?
கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் திரைப்படத்தில், ஐஸ்வர்யா ராயின் தாத்தாவாக நடித்தவர், பக்கவாதம் ஏற்பட்டு படுத்திருப்பார். அவரைப் பார்த்தால், கோமாவில் படுத்தவர் போலவே இருப்பார். வாய் மட்டும் ஓயாமல், ‘உய்... உய்...’ எனச் சொல்லிக் கொண்டிருக்கும்; கண் அசைந்து, எதிரே இருக்கும் பெட்டியைப் பார்க்கும்.
கடைசி பேத்தி தான், பெட்டியைப்பார்த்து பார்த்து தாத்தா ஏதோ சொல்கிறார் என்பது புரிந்து, தாத்தா அருகே பெட்டியை எடுத்து வைப்பாள். சம்பவம் நடந்த அடுத்த நொடி, தாத்தா உயிர் நீத்து விடுவார்.
வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தில் கமல்ஹாசன் சொல்லிக் கொடுக்கும் ‘கட்டிப்பிடி’ வைத்தியம், கோமா நோயாளிகள் உடல் இயக்கத்துடன் மீள்வதற்கான மிகச் சிறந்த உன்னதமான வைத்தியம். எப்படி இது சாத்தியம்? விளக்குகிறார் பேராசிரியர் மணி.
வாழ்க்கையில் பல விஷயங்களை பிடிக்காமலோ, பிடித்தும் பிடிவாதமாகவோ பொருட்டே படுத்தாமல் நகர்ந்து விடுவோம். அதே சமயம், ஒரு நொடிப் பொழுதில் நிகழும் விஷயம் உங்களுக்கு எதிரானது என்று தோன்றினால், கவனிக்க... தோன்றிய உடனேயே, பல வேலைகளுக்கு நடுவில் மனதில் அசை போட்டு, நேரத்தையும், மனதையும் கெடுத்து, தோன்றிய கற்பனைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுத்து, பாழ்பட்டுப் போகிறோம்.
கை, கால் சாதாரணமாக அமைந்து, உடல் உறுப்புகள் அனைத்தும் செயல்பாட்டில் இருக்கும் வரை, இப்படியே வாழ்க்கையை ஓட்டுகிறோம். மனிதன் என்ற அற்புதமான படைப்பை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொள்ள, ‘கோமாவில் நான்’ புத்தகம் மிகப் பெரிய பயன் கொடுக்கும். அறிவியல் வழியே அனைத்தும் புட்டு புட்டு வைத்து, ‘மனிதா திருந்து’ என்பதை, ஆன்மிக ரீதியாக உணர்த்துகிறார்.
– பானுமதி