நடிகர் ராதாரவியின் வாழ்க்கை சம்பவங்களை சுவாரசியமாகக் கூறும் நுால். இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. ‘நக்கீரன்’ இதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. பிரபல நடிகர் எம்.ஆர்.ராதா, சிறையில் இருந்து விடுதலையானதில் இருந்து துவங்குகிறது. தகவல்கள் பரபரப்பு சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. இயல்பான செய்தி மொழியில் மொத்த வாழ்க்கை வரலாறும் சொல்லப்பட்டு உள்ளதால், வாசிக்க சுலமாக உள்ளது.
முதல் புத்தகம் 60 இயல்களைக் கொண்டுள்ளது. இரண்டாவது பாகம், துணிவே துணை என நம்பிக்கை ஏற்படுத்தும், 123ம் இயலுடன் முடிகிறது. எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதால், நீண்ட தமிழ் திரையுலக வரலாற்று நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
இளைமைப் பருவத்தில் சந்தித்த முக்கிய பிரமுகர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அரசியலும், தமிழக திரையுலகமும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்ததற்கு இந்த புத்தகம் மேலும் ஒரு சான்றாக உள்ளது. வாழ்வின் ஏற்ற இறக்கங்களை மிக இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார். திரையுலக பிரபலம் என்பதால், மேலம் பல பிரபலங்களின் செயல்பாடுகளும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சுவை நிறைந்த தன் வரலாற்று நுால்.
– அமுதன்