மேடம் என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழ்ப் பேச்சு வடிவமான, ‘மதாம்’ என்பது நாவலின் பெயராகி, புதுச்சேரி கவர்னராக இருந்த டியூப்ளேயின் மனைவி ழான் என்பவரைக் குறிக்கிறது. அவரது வரலாற்றையும், டியூப்ளேயின் வரலாற்றையும் புதுச்சேரியின் பேச்சு வழக்குடன் எடுத்துஉரைக்கிறது.
பிரெஞ்சு சொற்கள் தமிழ் மயமாக்கப்பட்டு நாவலில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றை விளக்குவதற்காக நட்சத்திரக் குறியிட்டு பொருள் விளக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கவர்னராக டியூப்ளே, 12 ஆண்டுகள் பதவியில் இருந்தார். அந்த வரலாறு தான் நாவலாகியிருக்கிறது.
கவர்னராக இருந்த அவரை குற்றவாளி என்று பிரான்சுக்கு திருப்பி அனுப்புதலுடன் நாவல் நிறைவடைகிறது. புதுச்சேரியிலுள்ள வேதபுரீசுவரர் கோவில் இடிக்கப்பட்டது, பாதிரியார்களுடன் தவறான ஆலோசனை மேற்கொண்டது, லஞ்சம் பெற்றது போன்ற குற்றச்சாட்டுகளைத் தாங்கி அழுது கொண்டே பிரான்சு நாட்டுக்கு திரும்புகிறார். ஆனால், மீண்டும் கவர்னராக புதுச்சேரிக்குத் திரும்புவோம் என்னும் நம்பிக்கையுடன் புறப்படுகிறார்.
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை ஆதாரமாகக் கொண்டு இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. முப்பத்தேழு அத்தியாயங்களில் நிறைவடைகிறது; கையில் எடுத்தால், வைக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பு குன்றாமல் உள்ளது.
– முகிலை ராசபாண்டியன்