விருந்தோம்பல் பற்றிப் பழந்தமிழ் இலக்கியங்கள் மிகப் பெரிதாகப் போற்றியுரைக்கின்றன. இலக்கியம் போற்றும் இதன் அருமை பெருமைகளை ஒன்றுவிடாமல் விரிவாகவும் ஆழமாகவும் பதிவு செய்துள்ள நுால்.
விருந்து என்பதற்குப் புதுமை என்ற தொல்காப்பியச் சொல்லாடலில் தொடங்கிச் சங்க இலக்கியம், நீதி இலக்கியம் வரை சான்றுகளைத் தந்து விருந்தோம்பலின் சிறப்பை எடுத்துரைக்கிறது.
தமிழ் இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கியத்திலும் தகவல்களைச் சுட்டியிருப்பது, பரந்த வாசிப்புத் தன்மையைக் காட்டுகிறது. கிரேக்கத்தில் விருந்தோம்பலுக்கு எனத் தனி விதி இருந்தது என்பதை கோடிட்டு காட்டிச் செல்கிறார்.
தமிழர்தம் வாழ்வில் விருந்தோம்பல் வேள்வியாகவே செயற்பட்டது. விருந்தோம்பலுக்குப் பேரரசு தேவையில்லை; பெருந்தன்மையே தேவை என்பதை எடுத்துரைக்கும் கருத்தியல் போற்றத்தக்கது.
விருந்தோம்பல் சிதைகிற போதே, நாட்டின் பண்பாடு வேரோடு சாய்ந்துவிடும் என்ற சிந்தனையை முன் வைக்கிறார் ஆசிரியர். வேளாண்மை என்ற சொல்லாடல் விருந்தோம்பலோடு தொடர்புடையதை எடுத்துரைக்கிறார்.
– ராம.குருநாதன்