வாசகர்கள் எதிர்பார்த்திருந்த ‘தினமலர் – வாரமலர்’ அந்துமணி யின் ‘கேள்வி – பதில்’ தொகுப்பு சிறப்பான புத்தகமாக வந்து உள்ளது. எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல, 50 லட்சத்திற்கும் மேலான வாசக, வாசகியர் வாசிக்கவும் – நேசிக்கவும் கூடிய எழுத்தாளர் அந்துமணி ஒருவராகத்தான் இருக்க முடியும்; லட்சக்கணக்கான வாசகர்களின் ஆர்வத்தை இந்த புத்தகம் பூர்த்தி செய்யும்.
கடந்த 1988 முதல் 1997ம் ஆண்டு வரை ‘வாரமலர்’ இதழில் வெளிவந்த கேள்வி – பதில்கள் மட்டுமே இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,521 கேள்வி – பதில்கள். எந்த பதிலும் சாதாரணமானதும் இல்லை; ஒன்றுக்கு ஒன்று சளைத்ததும் இல்லை.
பெண்களின் தன்னம்பிக்கைக்கு, உயர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள அந்துமணியின் பதில்கள். அதேபோன்று பெண்கள் பிறந்த வீட்டில், புகுந்த வீட்டில், வேலை செய்யும் இடத்தில், பயணத்தில், பொது இடத்தில் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை பரிவான பதில்களால் பாதுகாப்பு தந்து வருகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
அந்துமணியின் பெயருக்கான காரணம் அந்துமணிக்கு தெரிந்திருக்கிறதோ, இல்லையோ கவுந்தப்பாடி வி.கேசவனுக்கு தெரிந்திருக்கிறது. புத்தகத்தை படிக்கும் போது நீங்களும் தெரிந்து கொள்வீர்கள். யாருடைய மனதையும் புண்படுத்தாமல் இன்னும் சொல்லப்போனால் சம்பந்தப்பட்டவர்களையே சிரிக்க வைத்திடச் செய்திடும் நையாண்டி நடை இவருடையது. தன்னையே பல இடங்களில் நையாண்டிப் பொருளாகவும் ஆக்கிக் கொண்டுள்ளார். இந்தப் புத்தகம் ஒரு காலப்பெட்டகம் மட்டுமல்ல; கருத்துப் பெட்டகமும் கூட!
– எல்.முருகராஜ்