இது அவசர உலக நாவல் அல்ல. ஐந்து ஆண்டுகளாக சிந்தித்து எழுதிய நாவல். கீதையின் 18 அத்தியாயங்களையும் சாறு எடுத்து வடித்து கொடுத்திருக்கிறார். போக சாலை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட கீதா என்ற இளம்பெண் எப்படி தீயவர்களால் கறைபடிந்தாளோ, அதுபோல நல்லவர்களின் கூட்டுறவால் யாகசாலை ஆக மாறினாள் என்பதை கீதையை மையமாக வைத்து தத்துவ நாவலாக உருவாக்கிஉள்ளது.
புகழ் மிக்கவன் பின்னாளில் அபகீர்த்தி அடைந்துவிட்டால் அது மரணத்தை விட கொடியது என்ற கீதையின் வாசகம் இந்த நாவலின் மையப்புள்ளி. நல்ல மருத்துவரால் கெட்டுப் போனவள் என்ற முத்திரை மாறுகிறது. கிராம சேவகி ஆகிறாள். அங்கே இரண்டு பேர் காதலிக்கின்றனர். ஒருவன் அவளை காதலிக்கிறான். மற்றொருவன் அவள் ஆத்மாவை காதலிக்கிறான்.
அவளைக் காதலித்தவன் அந்த மருத்துவரின் மகன் என்ற முடிச்சு அவிழ்க்கப்படும்போது கதை வேறு திசையை நோக்கி நடக்கிறது. உலகம் முழுக்க ஒரே மதம், இறைவன் என்ற சித்தாந்தத்தை கதை நாயகி எடுத்துச்சொல்ல கதை தத்துவம் ஆக்கப்படுகிறது. ஆனால் எதிர்பாராத முடிவு.
ஆன்மாவை காதலித்தவன் இறந்துவிட எரியும் சிதையில், தனக்கு வழிகாட்டிய கீதையையும் சாம்பல் ஆக்குகிறாள். உலகம் முழுக்க ஒரே மதம் வரும் என்றால் கீதை எரிக்கப்பட்டதில் தப்பில்லை.
– சீத்தலைச் சாத்தன்