ராமாயணத்தில் ராவணனின் சிறந்த குணங்களை விளக்குவதன் மூலம் உயர்த்திப் பிடிக்கிறது. நாரதரும், சூத முனிவரும் உரையாடுவதைப் பெரும்பாலும் காட்சிப்படுத்துகிறது. ராமன், லட்சுமணன், சீதை, ராவணன், மண்டோதரி, கரன் துாஷன், இந்திரஜித், கும்பகர்ணன், வாலி, சுக்ரீவன், அனுமன், நாரதர், சூத முனிவர் முதலியோர் நாடகக் கதாபாத்திரங்களாக இடம் பெற்றுள்ளனர். நாடக உத்திகள் பின்பற்றப்படுவதோடு, ‘பிளாஷ்பேக்’ நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
19 காட்சிகளோடு நாடகம் நிறைவடைகிறது. மகாபாரத நிகழ்ச்சிகளும், சிவ தனுசுவைப் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் உரையாடல்கள் இடம் பெற்றுள்ளன. ராமாயண நிகழ்வுகளைப் புதிய நோக்கில் ஆராய்கிறது இந்த நுால். பூலோக வாசிகள் பேசிக் கொண்ட கருத்துகளுக்கு விளக்கம் தருவதாக அமைந்துள்ளது. தமிழ் நடை, எளிய பொருண்மை விளக்கத்தோடு உள்ளது.
நாடகத்திற்கான உத்திகள், அச்சம், வியப்பு, சினம், சிருங்காரம் போன்ற நவரசங்களும் தேவையான இடங்களில் பொருத்தமாக அமைந்துள்ளன. வேதவதியின் மறுபிறப்பு சீதை, சீதையை விடுதலை செய்து விடு என்று பலவாறான கருத்துகளைக் கூறி வீடணன் மன்றாடுகிற காட்சி அற்புதம். இந்திய நிலப்பரப்புடனே இலங்கை இருந்தது என்றும், ஈழம் என்ற அரசி ஆட்சி புரிந்த பகுதியே ஈழ நாடு என்றும் அழைக்கப்பட்டது. கடல் கோள்களால் ஈழம் தனியே பிரிந்து விட்டது என்ற வரலாற்றுக் குறிப்பைத் தருகிறது. ராமாயண நிகழ்ச்சிகளையொட்டிய பிற தகவல்களை அறிந்து கொள்ள உதவும் நாடக நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்