சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். இவரது 20 சிறுகதைகளை இன்றைய சமூகம் வாசிக்க வேண்டும் என தொகுக்கப்பட்டுள்ளது.
இயற்கை வளங்களை அழிப்பதை கண்டு, மனித மனம் கோபம் கொள்ளாததை, ‘காளவாய்’ கதை சாட்டையால் அடிக்கிறது. குழந்தைகளுடன் வாழும் பால்ய நண்பனை காணும்போது, தான் திருமணம் செய்து கொள்ளாததை நினைத்து கலங்குவதை, ‘அக்கரைப்பச்சை’ கதை எடை போடுகிறது.
ஆண்களால் அடக்கப்படும் பெண்கள், எரிமலையாக வெடித்தால் என்னவாகும் என்பதை, ‘சுதந்திர பறவைகள்’ கதை சிறகடிக்க வைக்கிறது. குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு எப்படியானது என, ஒவ்வொரு கதைகளும் விவரிக்கின்றன. ஊழல், சுரண்டல், பழிவாங்கல், அதிகாரம், பணபலம், ஆணவம் போன்ற குணாதிசயங்கள், கதைகளில் விரிந்து கிடக்கின்றன. எழுத்தாளர்களாக துடிக்கும் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்