தொன்மை மிக்க தமிழிலக்கிய வரலாற்றை எடுத்துரைக்கும் நுால். மனித நாகரிகத்தின் பிறப்பிடம் லெமூரியா கண்டமென்றும், குமரி நாடே தமிழர் பிறப்பகம் என்றும் முன்வைத்து, குமரிக்கண்டப் பரப்பின் வரையறைகளை விளக்கி, தமிழ் மொழியின் பல்வேறு ஒலி வெளிப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சொல்லுக்கான பொருள்களின் நுண்ணிய வேறுபாடுகளைக் கூறி, சொல்லொழுங்கு மற்றும் முன்னிலைப் பெயர்கள் வகைப்படுத்தப்பட்டு உதாரணங்களோடு விளக்கப்பட்டுள்ளன. உயர்திணை, அக்றிணை எனும் பகுப்புகளை விளக்கி, தொன்றுதொட்டுப் பழகி வந்த எண்ணற்ற பழஞ்சொற்களும், சொல் வடிவங்களும் பிற்காலத்தில் ஊழிகள் போன்றவற்றால் அழிந்தனவாகக் கூறப்படுகிறது.
ஐந்திணை சார்ந்த குமரித் தமிழர் வரலாறுகளை கூறி, காலப்போக்கில் ஏற்பட்ட திணை மயக்கத்தின் தாக்கங்களால் விளைந்த நாகரிக வளர்ச்சிகளும், உறைவிடம், உடை அணிதல், உணவு முறை, அணிகலன்கள், கைத்தொழில்கள் போன்றவற்றில் மக்களின் நிலைப்பாடும் விவரிக்கப்பட்டுள்ளன. மொழி ஆய்வாளர்களுக்கு பயன் தரவல்ல நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு