தமிழ் மொழியின் வரலாற்றை, இலக்கியம், இலக்கணம் மற்றும் உரையாசிரியர்கள், வெளிநாட்டவர்கள் எழுதிய இலக்கணம், அகராதிகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட அடிப்படை சான்றுகள் மூலம் விளக்கும் நுால்.
தொடக்கத்தில் இருந்த மூல திராவிட மொழி, தென் திராவிட மொழிகளில் தமிழ் குறித்த வரலாறு ஆகியவை சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. தொன்மை இலக்கண நுால் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் ஒலியனியல் மற்றும் உருபனியல் குறித்தும் கூறப்பட்டுள்ளது. சங்க காலம் முதல் இருபதாம் நுாற்றாண்டு வரை, தமிழ் மொழி காலமாக சிறந்து விளங்கிய விதம் குறித்தும் இந்நுாலில் கூறப்பட்டுள்ளது.
தொல்காப்பிய தமிழ் மற்றும் சங்க காலத் தமிழ் இடையே உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் விளக்கப்பட்டுள்ளன. பல்லவர்கள், சோழர்கள், நாயக்கர் காலத்தில் தமிழ் மொழியின் மாற்றம் குறித்த விளக்கங்களும் சான்றுகளுடன் தரப்பட்டுள்ளன. சமஸ்கிருத சொற்கள் தமிழாக்கம் செய்யப்பட்டது குறித்தும் செய்திகள் உள்ளன.
நுாலின் இடையிடையில் தேவையான குறிப்புகள் அட்டவணையாக அளிக்கப்பட்டுள்ளது சிறப்பு. தமிழ் மொழி வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– முகில்குமரன்