இந்து கடவுள் என்றால் இந்தியாவிலிருந்து தான் வரமுடியுமா... பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம்; மகாகாளி உருவெடுக்கலாம்; சரஸ்வதி வீணை மீட்டலாம். மகாலட்சுமி அருட்கடாட்சம் தரலாம் என்பதை உணர்த்தும் நுால்.
பிரான்சில் இருந்து வந்த மிர்ரா, அன்னையாக மகான் அரவிந்தர் அடியொற்றி, தத்துவங்களை பின்பற்றி நடந்தவர். நீ நீயாய் இரு என்பது தான் அன்னை சொல்லும் வேதம். உண்மை, அன்பு, பாசம் என நற்பண்புகளுடன் விளங்குவது தான் நீயாக இருப்பதன் அவசியம். கடவுளை வற்புறுத்தி அழைக்காதே என்பதும் இவரது தாரக மந்திரம்.
தீங்கு செய்யாமல் இருந்தால் தெய்வம் உள்ளத்தில் குடிகொள்ளும். அதனுடன் மெல்ல மெல்ல ஐக்கியமாகலாம் என்கிற தத்துவத்தை எளிமையாக விளக்குகிறார். கடமைகளை துறக்காமல் சரிவர செய்வது தான் வாழ்க்கையின் அடிநாதம். யோகா, உடற்பயிற்சி, விளையாட்டு, வேலை, பொழுதுபோக்கு என வாழ்க்கையின் அம்சங்களை அனுபவித்துக் கொண்டே கடவுளை அடைவது தான் படைப்பின் பெருமை என்பதை அன்னை மிர்ராவின் வாழ்க்கை உணர்த்துகிறது.
படித்து முடித்தவுடன் புதுச்சேரி அரவிந்தரின் ஆசிரமம் சென்று அன்னையை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலை தவிர்க்க முடியாது.
– எம்.எம்.ஜெ.,