நண்பர்களாக இருப்பவர்கள் நாளை பிரியலாம். ஆனால் வேறு யாரோ நண்பர்களாகத்தான் இருப்பர். நண்பர்கள் மாறலாம், நட்பு மாறாதது என்னும் தத்துவ உண்மைக்கு விளக்கமாக அமைந்துள்ள நுால்.
சங்க இலக்கியத்தில் தலைவிக்குத் தோழி என்னும் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெண் பாத்திரத்தை நட்புக்குரிய இலக்கணமாக்கிக் காட்டியுள்ளார். அவ்வைக்கும், அதியமானுக்கும் இடையில் நிலவிய நட்பின் பெருமையை விவரித்துள்ளார்.
கோப்பெருஞ்சோழனும், பிசிராந்தையாரும் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டதில்லை. தற்காலத்தில் இருப்பதுபோல் தொலைபேசி உரையாடல் என எதுவும் இல்லை. ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்ட நிலையிலேயே இருவரும் தங்கள் உள்ளத்துக்குள் நட்பை வளர்த்துக்கொண்டனர்.
அந்த நட்பு இறப்புவரை தொடர்ந்த உண்மையை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. இப்படி ஓர் நட்பை எந்த இலக்கியத்திலும் காண இயலாது என்பதை அறிவிக்கிறது. நட்புக்கு இலக்கணம் கூறும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்