உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி ஐஸன் ஹோவர் பற்றிய வாழ்க்கை வரலாற்று நுால். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அமெரிக்க ஜனாதிபதிகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க ஒருவராக விளங்கியவரைப் பதினோரு தலைப்புகளில் ஆய்கிறது.
ஏழ்மை நிலையிலிருந்து ஓர் உன்னத நிலைக்கு உருவாக்கிக்கொண்டவரின் எளிமை, இன்சொல், புன்னகையால் மக்களின் இதயங்களில் இடம்பிடித்தது பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆடம்பரத்தை அறவே வெறுத்தவர். தாயையும், தாய்மொழியையும் மிகவும் போற்றியவர். ராணுவ அதிகாரியாக இருந்தும் போருக்கு எதிரான சிந்தையை மனதில் விதைத்தவர்.
வட ஆப்ரிக்கப் போரிலும், இத்தாலியப்போரிலும் தீவிரப் பங்காற்றிய நிலைகளையும், மகா சேனாதிபதியாக ஆன நிலையையும் எடுத்துரைக்கிறது. மேஜர், லெப்டினென்ட் கர்னல் ஆகிய பதவிகளில் பணியாற்றிய அவர், படிப்படியாக முன்னேறி உயர்ந்த பதவியான அமெரிக்க அதிபர் பதவி வரை வகுத்தவர்.
சர்ச்சிலோடும், ஸ்டாலினோடும் நெருங்கிப் பழகியவர்; இவ்விருவருமே இங்கிலாந்திலும், ரஷ்யாவிலும் அவருக்கு மிகுந்த மரியாதை தந்து பெருமைப்படுத்தினர். இந்நுால் ஐஸன் ஹோவரின் ஒருபகுதி வாழ்க்கையைத் திறம்பட எடுத்துரைக்கிறது.
– ராம.குருநாதன்