நாட்டின் வளர்ச்சி என்பது அந்த நாட்டு மக்களின் வளர்ச்சியில் இருக்கிறது; மக்களின் வளர்ச்சி என்பது அவர்களுக்கு தரப்படும் சமமான வாய்ப்புகளில் இருக்கிறது. அப்படி சம வாய்ப்பு பெற இயலாத ஏழை எளிய மக்களின் அரிய வழிகாட்டியாக அம்மக்களை உயர்த்த பாடுபட்டவர் தான், கேரளத்தில் செம்பழந்தியில் அவதரித்த ஸ்ரீ நாராயண குரு.
ஒரு ஜாதி, ஒரு மதம், ஒரு தெய்வம். மதம் எதுவானாலும் மனிதன் நன்றானால் போதும் என்று மனிதத்தை முன்னிறுத்தி உபதேசித்த மனிதநேயவாதி. ஜாதி முறையில் எதையும் பேசாதே, கேளாதே என்பது இவரது திருவாக்கு.
சமுதாயப் புரட்சியும், சமயப் புரட்சியும் செய்த ஸ்ரீ நாராயண குரு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அகிம்சை வழியில் நடத்திய போராட்டங்களும், அதனால் அந்த மக்களுக்கு விளைந்த நன்மைகளும், சமூக மாற்றங்களும் பிரமிப்பூட்டுபவை; மனதிற்கு நிறைவு தருபவை. ஸ்ரீ நாராயண குருவைப் பற்றி இதுவரை அறியப்படாமல் இருந்த பல உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டியுள்ளார்.
-– இளங்கோவன்