புத்தக திறனாய்வு, கவிதை, சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகளின் தொகுப்பு இந்நுால். கட்டுரையாளர்கள், கவிஞர்கள், கதையாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், நுால் விமர்சகர்கள் என, 40 படைப்பாளிகளின் படையலாக வந்துள்ளது.
சவப்பொட்டி செய்பவரின் வாழ்க்கை, கஸ்கி இனப் பெண் கடந்து வந்த பாதை, தொண்ணுாறுகளில் காஷ்மீரின் கதை, டில்லி வாழ்வியல், கத்தோலிக்க குடும்ப வாழ்க்கை என, விருதுக்கு இறுதி பட்டியலில் தேர்வான ஐந்து நுால்கள் குறித்து சுவாரசியமாக விளக்கப்பட்டுள்ளது.
பறவை ஆர்வலரின் பயண குறிப்பு, இயற்கையின் அழகியலை படம் பிடித்து காட்டுகிறது. சங்க இலக்கியத்தில், பெண் புலவர்களின் துணிவு குறித்து, பாடல்களுடன் விளக்கிய விதம் புதுமை. கண்டிப்பு குடும்பத்தில் வளர்ந்தவரின் சினிமா மீதுள்ள காதல், சினிமாவை பார்த்த விதம், சமூகத்தில் சினிமாவின் தாக்கம் குறித்து, சினிமா பருவம் என்ற தலைப்பு விமர்சன பார்வை வைக்கிறது. கதை, கவிதை, நாவல் எழுத முயற்சிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்