விசேஷம் இது வித்தியாசம் என்ற பெயரில் தமிழக கோவில்களின் அதிசயிக்கத்தக்க வரலாறு, செல்லும் வழி குறித்து எழுதிய ஆசிரியர் செல்லப்பாவின் இரண்டாவது புத்தகம் லவ குசா. கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுக் குட்டிகளாம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு இது.
இக்கதையில் மண முடிக்கும் போது சீதாவின் வயது, கானகம் சென்ற போது வயது, மகப்பேறின் போதுள்ள வயதை குறிப்பிடுவது அரிய தகவல். பொறுமையின் சிகரமான சீதா ஏன் பொங்கி எழுந்தாள்? வானளாவ புகழ்ந்து ராம் கதைகள் சொல்லிய அவளது புத்திரர்கள் ஏன் ராமபிரான் மீது கோபப்பட்டு அஸ்வமேத யாகம் செய்யக்கூடாது என எதிர்த்தனர் என்பது போன்ற கேள்விகளுக்கு ஆசிரியரின் விளக்கம் அலாதியானது.
சீதாவின் குணநலன்களை விளக்கும் போதெல்லாம், நடப்பிலுள்ள பெண்களின் வரலாற்றை ஒப்பீடு செய்கிறார். அந்தக் காலத்தில் பெண்கள் எப்படி இருந்தனர், இப்போது எப்படி உள்ளனர் என ஆசிரியர் தன் மனத்தாங்கலையும் வெளிப்படுத்தியுள்ளார். லவ குசா புத்தகம் சீதை புத்திரர்களை மட்டுமல்ல; சீதை, ராம சகோதரர்களின் மாண்பையும் விளக்குவது கூடுதல் சிறப்பு.
– எம்.எம்.ஜெ.,