பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் ஒன்று, கண்ணன் சேந்தனார் இயற்றிய திணைமொழி ஐம்பது. ஐந்திணைகள் பற்றிய காதல் பாடல்களைக் கொண்டுள்ளது. வார்ப்புரையாக வடித்த நுாலாசிரியரின் பழந்தமிழ்ப்பற்றை இதில் காணலாம்.
ஐம்பது வெண்பாக்களால் ஆன இந்த நுாலின் அருமையை அழகிய கருத்தோவியமாகத் தீட்டியிருக்கிறார். எளிய நடையில் அமைந்துள்ள கருத்துக்கள், யாவரும் படித்து இன்புறும் வகையில் உள்ளன. இயற்கை வருணனைகளையும், கருத்தமைந்த பாடல்களையும் நுனித்தறிந்து வார்ப்புரையாகத் தந்துள்ளமை பாராட்டுக்குரியது.
பாடல்களைக் காட்சிப்படுத்திக் ‘களமும் கவித்திறமும்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு பாடலுக்கும் எழுதியுள்ள கருத்துரை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மணமுகை என்பதற்கு மணவிழாக்குவளை என்று பொருள் கண்டிருப்பதும், ஓங்கல் இறுவரை என்று துவங்கும் பாடலுக்கு, என் மேனியில் இன்று துன்பத்தின் இடிகள் உருமுகின்றன என்று நயம்பட உரைத்திருப்பதும் மயில் பீலியாய் மனதை வருடுகின்றன என்று திறனாய்வு செய்திருப்பது போற்றுதற்குரியது.
– ராம.குருநாதன்