குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றாலும் முருகனின் ஆறு படை வீடுகள் தனிச்சிறப்பும், வரலாறும் பெற்றவை. முருகனின் ஆறுபடை வீடுகளைப் பற்றிய முழுமையான தொகுப்பை நூலாசிரியர் பிரபுசங்கர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
வீடு பேறு தரும் ஆறு படை வீடுகளின் வரலாறு, அவற்றின் தொன்மை, சுவாமியின் அலங்கார ரூபம், வீற்றிருக்கும் திருக்கோலம், கோவிலுக்கு செல்லும் வழி, அங்கு நடைபெறும் பூஜை முறைகளின் எண்ணிக்கை, கோவில் நடை திறந்திரக்கும் நேரம் மற்றும் திருவிழாக்கள் என அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய வழிகாட்டி புத்தகமாக உள்ளது.
கடற்கரையில் அமையப் பெற்றுள்ள ஒரே படை வீடு திருச்செந்தூர் தான். இங்கு முருகனின் பாதத்தில் இருந்து பெறப்படும் பத்ர விபூதி பிரசாதம் பிரசித்தம். திருச்செந்தூர் கோவிலில் பிள்ளைத் தமிழ் இன்றளவும் பாடுகின்றனர்.
பழநி மலைக்கோவிலில் போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷாண சிலை, அதன் சிறப்புகள் விளக்கப்படுகி்னறன.
மலையில்லா தஞ்சையில் சுவாமி மலையாய் வீற்றிருக்கும் முருகன். ஆண்டில் இரு முறை பிரமோற்ஸவம் நடைபெறும் திருத்தணிகை மலை என்றழைக்கப்படும் திருத்தணி கோவில், மலை மீது அமர்ந்த அழகர்மலை முருகன் கோவில் என ஆறு படைகளின் சிறப்புகளை விளக்குகிறார்.
கந்த சஷ்டி கவசம் இயற்றிய தேவராயரின் முருகனைப் பற்றிய பிற கவச பாடல்களையும் விவரித்துள்ளார் ஆசிரியர். ‘அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால் அருகினில் ஓடி வருவான்; அன்பு பெருகி அருள்புரிவான்’ என்ற பாடலுக்கேற்ப, முருகனை நினைத்து உருகுபவர்களுக்கு இந்த புத்தகம் கவசமாக விளங்கும்.
– மலர்