டில்லியில் விவசாயிகள் போராட்டம் குறித்த 43 ஆவணக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். விவசாயிகளின் போராட்டத்தில் 25 நாட்கள் தங்கியிருந்து, கள அனுபவங்களைக் கட்டுரைகளாக ஆக்கியுள்ளார்.
போராட்டங்களுக்கான முக்கியக் காரணிகளாக வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம், ஒப்பந்த மசோதா 2020, அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020 ஆகியவற்றை விளக்கி, சுற்றி நிகழும் வலைப்பின்னலின் சிக்கலை அவிழ்க்க முயற்சிக்கிறார்.
போராட்டக் களத்தில் போராளிகளுக்கும் உணவு, உடை, குடிநீர், மருத்துவம், தங்குமிடம் எதற்கும் விலையில்லை; அது விலையில்லாத உலகம் எனப் பதிவு செய்கிறது. இந்தியா முழுக்க கொரோனா தீவிரமாக மரண வேட்டையை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், கடுங்குளிரில் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தகவல்களைப் புகைப்படங்களுடன் பதிவு செய்திருப்பது பாராட்டத்தக்கது.
போராட்டக் களத்தில் லட்சக்கணக்கான விவசாயிகள் குடும்பம் குடும்பமாகத் தங்கியிருந்த போதும், அவர்களின் ஒழுக்க நெறிகளாலும், உண்ணும் பயிர் வகை உணவுகளாலும் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை பதிவு செய்கிறார். விவசாயிகளின் போராட்டத் தகவல் களஞ்சியமாக உள்ளது. மேலும் பல தரவின் அடிப்படையிலான ஆதாரங்களை நோக்கியத் தேடலை உருவாக்குகிறது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்