தமிழின் சிறந்த எழுத்தாளுமைகளில் 20 பேரை முதற்கட்டமாக தேர்வு செய்து, அவர்களின் படைப்புகள் குறித்தும், அவர்களைப் பற்றியும் சுவைபட சுருக்கமாக சொல்லி உள்ளார் நுாலாசிரியர்.
தியாகராஜன் எப்படி எழுத்தாளர் அசோகமித்ரன் ஆனார், அவரின் கதை மற்றும் புதினங்களில் உலா வரும் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் நேயம், ஜெயகாந்தனின் கவிதை மனம், அம்மை நோயால் முடங்கிய ஆர்.சூடாமணியின் அறச்சீற்ற கதைகள், இனிப்புக்குள் ஒளிந்திருக்கும் புளிப்பைப் போல் நகைச்சுவை வழியே சிந்தனைக்கும் இடம் ஒதுக்கி வைத்திருக்கும் ஜா.ரா.சுந்தரேசன் என்கிற பாக்கியம் ராமசாமியின் படைப்புகள் குறித்தும் கூறப்பட்டுள்ளன.
அதேபோல், சுந்தர ராமசாமி, ரா.கி.ரங்கராஜன், தேவன், சிதம்பர சுப்ரமணியன், லா.ச.ரா., – உ.வே.சா., சுஜாதா, ந.பிச்சமூர்த்தி போன்ற எழுத்தாளர்கள் பற்றியும் பருந்துப் பார்வையில் தெரிந்து கொள்ளலாம். அவர்களைப் பற்றி அறிந்தோருக்கு மறுவாசிப்பு வேட்கையை துாண்டும்.
– பெருந்துறையான்