பதினான்காவது மாடி, 7:30 மணி எக்ஸ்பிரஸ், உன் மனம் காயோ பழமோ?, உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர், பெண்ணை நம்பாதே என்ற தமிழ் நாவல்களின் தொகுப்பாக வெளிவந்துள்ள நுால். வடிவுடை நம்பி, கெண்டைவிழி என்ற பாத்திரங்களுடன் துவங்குகிறது பதினான்காவது மாடி. கொள்ளையை சாதாரணமாகச் செய்த வடிவுடைநம்பி, மீண்டும் ஒரு திருட்டில் ஈடுபட போலீஸ் கமிஷனர் கேட்பதில் மர்மம் துவங்குகிறது.
இரண்டு பாத்திரங்களுடன் சாந்தோமில் துவங்குகிறது, 7:30 மணி எக்ஸ்பிரஸ் நாவல். பேரின்பத்திற்காக, மெரினா உணவகத்தில் காத்திருந்த நாவலன், அவர் வராததால், அந்தச் செய்தியை தெரிவிக்க விரும்பி, தொலைபேசியை நோக்கிச் சென்றான். அங்கே பேரின்பம் பிணமாகக் கிடந்தார் என தொடர்கிறது.
ஐந்து நாவல்களும் மர்மக் காடாகச் செல்கின்றன. அத்தியாய நிறைவில் மர்மப் புதிர் விடுவிப்பு என்ற உத்தி பின்பற்றப்பட்டுள்ளது. எளிய மொழி நடையில் அமைந்துள்ளது. அளவான வருணனை, அழகான தமிழ் நடை, தேவைக்கேற்ற மர்மம், தெளிவான கதையோட்டம் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.
– முகிலை ராசபாண்டியன்