மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ள நுால். மனிதர்களின் நான்கு பருவங்கள் கீச்சி, கியா, மாச்சி, மாயா என்ற நான்கு பதங்களால் விளக்கப்பட்டுள்ளது. கடவுள் மகிமை என்ற பகுதியில் தாயுமானவர், கம்பர், திருமூலர், திருநாவுக்கரசர் பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன. விடா முயற்சி என்ற பகுதியில், சிங்கம், கொக்கு, கோழி, காக்கை, நாய், கழுதை ஆகியவற்றிடம் கற்க வேண்டிய குணங்கள் விளக்கப்பட்டுள்ளன.
மவுனத்தின் ஆதாயம் என்ற பகுதியில் அவ்வையார், ஏலாதி, திருக்குறள் பாடல்கள் விளக்கப்படுகின்றன. இனிமையின் ஆனந்தம் என்ற பகுதியில், சீறாப்புராணம், நீதிவெண்பா, நன்னெறி, நீதிநெறிவிளக்கம், திருமந்திரம் ஆகிய நுால்களின் பாடல்கள் கூறி விளக்கப்பட்டுள்ளன.
மனிதனுக்குத் தைரியம், தேசாபிமானம், நன்றி உணர்வு முதலியன தேவை என்பது, பல எடுத்துக் காட்டுகளால் விளக்கப் பட்டுள்ளன. அன்பு, ஈகை, கீர்த்தி, உலோபம், தரித்திரம், கடன், புண்ணியம், காமம் முதலிய செய்திகளை, பல நுால்களின் துணை கொண்டு விளக்கப்படுகின்றன.
மாதர்கண்கள், கோபம், அழுக்காறு, துன்பம், மனித ஆயுளின் அளவு ஆகிய தலைப்புகளில் கருத்துகள் விளக்கப்பட்டு, முதல் புத்தகம் நிறைவு பெறுகிறது. இதுபோல, 12 புத்தகங்கள் இந்த நுாலில் இடம் பெற்றுள்ளன. இவற்றில், இல்லற இன்ப இரகசியம், சிசு உற்பத்தி, கர்ப்பக்கால சுகாதார விளக்கம், கர்ப்ப கால நோய்களும் பரிகாரங்களும், மருத்துவ சாஸ்திரம், சிசு பரிபாலனம், புத்திரச் செல்வம், ஆண்பெண் மலடு, ஆண்மையின் அழிவும் அதன் மீட்சியும், சமயோசித சஞ்சீவி ஆகிய தலைப்புகளில் பல கருத்துகள் விளக்கப்பட்டிருக்கின்றன.
– டாக்டர் கலியன் சம்பத்து