வழக்கம் போல, ‘புரியாத தலைப்பு’ என்று வகைப்படுத்தி, புத்தகத்தைத் தவிர்க்கத் தீர்மானித்தால், நாம் முட்டாள் ஆகி விடுவோம். நாம் பிறந்தது எதற்காக? கர்ம பலனை அனுபவிக்க, நாமே ஆசைப்பட்டு பிறப்பு எடுக்கிறோம். இந்த உண்மையை விளக்குவது தான் இந்த புத்தகம். தனியாகப் பிறக்கிறோம்; தனியாக மடிகிறோம். தாய், தந்தை, அக்கா, தம்பி, அண்ணன், தங்கை, மனைவி, கணவன், குழந்தைகள் என உறவுப் பாசங்கள் ஆட்டிப் படைக்கின்றன.
இந்த பாசங்கள் அனைத்தும் உண்மை தானா, அவசியமா, ஏன் அல்லல்படுகிறோம் என்பது புரிய வேண்டுமானால், ‘அஷ்டாவக்ர கீதை’யைப் படிக்க வேண்டும். விவேகானந்தருக்கு அத்வைதத்தின் மீது பிடிப்பே இல்லாமல் இருந்ததாம். ஆனால், ராமகிருஷ்ண பரமஹம்சர், அஷ்டாவக்ர கீதையை, தனக்காகப் படித்துக் காட்டச் சொல்வாராம். அப்படி படித்துக் காட்டியபோது தான், விவேகானந்தருக்கு ‘அத்வைதம் தவிர வேறு ஒன்றும் லாயக்கு இல்லை’ என்பது புரிந்ததாம்.
இப்போது அஷ்டாவக்ரருக்கு வருவோம். மகாபாரதத்தில் வன பர்வம் பகுதியில், கஹோர் – சுஜாதா தம்பதியின் மகனாக இவர் விளக்கப்படுகிறார். தாயின் வயிற்றில் இருந்தபோதே, தன் தந்தை வேதத்தைத் தவறாக உச்சரித்தார் என கோபம் கொண்டு, எதிர் குரல் கொடுத்த ‘எக்ஸ்பர்ட்’ இவர். இதனால், தந்தையின் சாபத்துக்கு ஆளாகி, அஷ்ட கோணலாக பிறந்தவர்.
பின், ஜனகரின் சபையில், தன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தை நீக்குவதற்காக, வாண்டி என்ற எக்ஸ்பர்ட்டுடன் வாதாடி வென்று, சமங்க நதியில் மூழ்கி, சாபம் நீங்கி நல்ல உடலைப் பெற்றவர். அதாவது, வேதத்தில் எக்ஸ்பர்ட்டுக்கும் எக்ஸ்பர்ட் இவர்!
மன்னனாக இருந்தாலும் துறவியாய் வாழ்ந்த ஜனக மகாராஜாவுக்கும், அஷ்டாவக்ரருக்கும் இடையே நடந்த உரையாடல் தான், இந்தப் புத்தகத்தில் தமிழில் விளக்கப்பட்டுள்ளது. வெற்றி, புகழ், கவுரவம், மமதை என அலட்டலும், பொழுதொரு பொய்யுமாய் அலையும் மனங்களுக்குத் தேவையான புத்தகம் இது!
– பானுமதி