தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரால் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட மணிமேகலை காப்பியத்திற்கு, மாறிவரும் காலத்திற்கேற்ப பல உரைகள் வந்துவிட்டன. அந்த வரிசையில், தற்போது மணிமேகலையின் 30 காதைகளுக்கு எழுதப்பட்ட மூலமும் உரையுமாக பதிப்பிக்கப்பட்டுள்ள முதல் பாகம் நுால்.
பத்தொன்பது காதைகளை எடுத்து, மூலப்பாடலைத் தந்து வாசிப்புக்கேற்ப பகுதி பகுதியாய் பொழிப்புரை தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு காதையின் பொழிப்புரைக்கு முன், சுருக்கமான கள முன்னோட்டம் தந்து, தொடர்ந்து பொழிப்புரைகளுக்கு இடையில் அரிய தகவல்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அடிக்குறிப்பாக அருஞ்சொற்பொருட்களும் தரப்பட்டுள்ளன. மூலப்பாடலில் பொதிந்துள்ள பல்வேறு தகவல்களுக்கு தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் எளிய உரை விளக்கம் தரப்பட்டுள்ளது சிறப்பு. காலங்கள் கடந்தாலும் சுவையில் சற்றும் குன்றாமல் விளங்கும் மணிமேகலை, பண்டைய தமிழர் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டுகிறது.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு