சன்மார்க்கம் என்பது சைவத்திற்கும் மேலானது, முரணானது என்ற தவறான கருதுகோளை உடைத்தெறிய வந்துள்ள ஆய்வு நுால். சைவ சித்தாந்தமோ, சைவ சமயமோ சுத்த சன்மார்க்க நெறிக்கு புறம்பானது அல்ல. அருள் வழங்குவதுதான் சத்தி நிபாதம்.
17 நுால்களை ஆராய்ந்து, 18 தலைப்புகளில் சைவத்தையும், சன்மார்க்கத்தையும் ஒப்பிட்டுள்ளார். திருமந்திரத்தில் சைவம், பதி, பசு, பாசம், சரியை, கிரியை, யோகம், ஞானம், சிவஞானபோதம், ஞானத்திற்குத் தடை சாதி, மதம், சமயம், சிவம், பொன்னம்பலம், முத்தி, சித்தி, எட்டு இரண்டு, சுத்த சன்மார்க்கம், ஞான சித்தர் காலம் ஆகிய தலைப்புகளில் பாடல் மேற்கோளுடன் விளக்குகிறார்.
சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ்சுத்த சைவம் என்ற நான்கு திருமூலரின் சைவக் கோட்பாடுகளையும், 36 தத்துவங்களையும், ஐந்து சிவ தத்துவங்களையும் திருவருட்பாவோடு அழகாக இணைத்துக் காட்டியுள்ளார்.
ஆறு சுவைகளுடன் உலகியல் சாப்பாடு, ‘ஊரமுது’ தொடர்ந்து உண்பவருக்கு மரணம் நிச்சயம். ஆண்டவன் அருள், ‘ஆரமுது’ உண்டவருக்கு மரணம் இல்லை. நித்தியமாய் வாழலாம் என்ற வள்ளலார் உபதேசம் தேனமுதம். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு, பசியாற்றுவித்தலே பக்தியின் வெளிப்பாடு என்பதை திருமுறை ஆதாரங்களுடன், திருவருட்பாவை விவரிப்பது சிறப்பாகும். சைவர்கள், சன்மார்க்கிகள் கையில் இருக்க வேண்டிய சிறந்த நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்