எளிமை தமிழில் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில், டாக்டர்களில் அதிக மருத்துவ நூல்கள் எழுதியவர் மருத்துவ எழுத்தாளர் ‘டாக்டர் கு.கணேசன். இவர், ‘தின மலர்’ மதுரை பதிப்பில், ‘என் பார்வை’ பகுதி யில் எழுதிய 33 மருத்துவ கட்டுரைகளின் தொகுப்பே இந்த நுால்.
இந்த கட்டுரைகள், ‘தினமலர்’ நாளிதழில் வெளியான போதே வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றன. புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் மாதிரிக்கு 10 கட்டுரைகளின் தலைப்பை எடுத்துக்கொள்வோம்...
‘செலவில்லாத மருந்து சிரிப்பு, உங்களுக்கு பிரஷர் இருக்கிறதா? உங்களுக்கு கொழுப்பு அதிகமா? இருதயத்தின் எதிரிகள் யார்? உங்களுக்கு இரண்டாவது இருதயம் வேண்டுமா? இருதயம் காக்க பத்து கட்டளைகள், சிறுநீரகம் காக்க பத்து கட்டளைகள், காக்க... காக்க... கல்லீரல் காக்க, மூட்டு வலிக்கு முடிவு கட்டுவோம், முகத்துக்குப் பரு பாரமா?’ இப்படிப்பட்ட தலைப்பு களில் நம் உடலை பற்றி எளிமையாக, அதுவும் ஒரு டாக்டர் எழுதினால் யார் தான் படிக்கமாட்டார்கள்.
அதுவே டாக்டர் கு.கணேசனின் வாசகர் வட்டம் வளரக் காரணம். இவரது கட்டுரைகள் வாசகர்களுக்கு பீதி தராது; மாறாக மருத்துவ அறிவும், ஆலோசனையும், ஆறுதலும் தரும். இந்த நுாலை படித்து விட்டால் நமக்கும் நோய் இருக்குமோ என்ற அச்சம் வராது; மாறாக நோய்களில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ளும் வித்தையை கற்றுக்கொள்ளலாம்.
அற்புதமான நம் உடலின் மருத்துவ அறிவியல் விந்தைகளை எளிதாக அறியலாம். குடும்பத்திற்கு ஒரு டாக்டர் என்பது போல, வீட்டிற்கு வீடு இந்த மருத்துவ கையேடும் இருக்க வேண்டும்.
– ஜி.வி.ஆர்.,