ஆன்மிக கருத்துகள் நிறைந்த நுால். வாழ்க்கையை அஞ்ஞானத்திற்கும், பொருளீட்டுவதற்கும், காமத்திற்கும் பயன்படுத்துவதை விடவும், மெய்ஞ்ஞான பொருளாகிய இறைவனை அடைய, தியானம் செய்து வாழ வேண்டும். பிறரையும் வாழ வைக்க வேண்டும்.
அமாவாசைக்கு அடுத்த பதினைந்து நாட்கள் ஏறுமுகம்; இதை ஆரோகணம் என்பர். இந்த காலகட்டத்தில், புண்ணியங்கள் செய்ய வேண்டும். பவுர்ணமியிலிருந்து அடுத்த பதினைந்து நாட்கள் இறங்குமுகம்; இதை அவரோகணம் என்பர். இந்த காலகட்டத்தில், பாவத்திற்காகப் பரிகாரம் செய்ய வேண்டும் என பதிவு செய்துள்ளார்.
உடல், உள்ளத் துாய்மை, உணவு முறை ஆரோக்கியம் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். உடல் ஆரோக்கியமே இறைவனை அடைய இன்றியமையாதது என்பது, திருமூலர் சொன்ன, ‘உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்பதை நினைவூட்டுகிறது.
வள்ளலார் கூறிய, ‘பசித்திரு தனித்திரு விழித்திரு’ போன்றவற்றைக் கடைப்பிடித்து, இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஆன்மிக அன்பர்களுக்கு மிகவும் பயன் தரும் நுால்.
– புலவர் சு.மதியழகன்