இருபதாம் நுாற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில், நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நாடகம் என, தமிழ் படைப்புகளின் அனைத்து வடிவங்களிலும், எழுச்சிமிக்க புதிய வகைப் படைப்பாளர்களின் வரவுகளைக் காண முடிந்தது.
அவர்களுள் குறிப்பிடத்தக்க புகழின் உச்சத்தைத் தொட்ட ஜெயகாந்தன், கண்ணதாசன், வல்லிக்கண்ணன் என்று பட்டியல் நீண்டு செல்லும். அதில், ஐம்பதுகளில் கோலோச்சிய ஆளுமைகளின் படைப்புகளின் மீதான பிற எழுத்தாளர்களின் விமர்சனங்களைக் குறிப்பிட்டு படைக்கப்பட்ட நுால்.
கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, அச்சு ஊடகம், வானொலி மற்றும் வெள்ளித்திரை ஆகிய தளங்களில் ஏற்பட்ட வளர்ச்சி, புதுக்கவிதை எழுச்சி, சமூக சீர்திருத்தம் போன்றவை, முன்னோட்டமாகத் தரப்பட்டு உள்ளன.
சமூகத் தாக்கம் உண்டாக்கிய எழுத்தாளர்கள் பலர், இந்திய இலக்கியச் சிற்பிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைத் துறை வளர்ச்சியில், கல்கி, ஜெயகாந்தன், கரிச்சான் குஞ்சு, சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வ., போன்ற ஆளுமைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் இலக்கிய வரலாற்றாளர்கள் படித்துப் பயன் பெறலாம்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு