எளிமைக்கு உதாரணம் இந்த புதிய ராமாயணம். சொல்ல சொல்ல இனிக்குதடா என்பது போல, படிக்க படிக்க பரவசம் தருகிறது. ராமா... உன் கருணை எத்தனை... என மனம் வியந்து கொண்டே கதைக்குள் செல்கிறது. சில மவுனங்கள் சில விளக்கங்களாய் ஐயம் தெளிவுற விளக்குகிறார் ஆசிரியர்.
சில கதாபாத்திரங்கள் ராமனோடு பேசும் போது, அந்த கதாபாத்திரங்களின் பிரமிப்பை நம் மனம் அப்படியே உள்வாங்குகிறது.‘நம் இருவர் தொழிலும் ஒன்று தானே ராமா... எனக்கே கட்டணம் தருகிறாயா’ என்கிறான் குகன். லட்சுமணனும், சீதையும் ஆச்சர்யத்தால் ‘அது எப்படி’ என்றனர். ‘ராமா நீ பிறவிப் பெருங்கடலை கடக்க உதவுகிறாய். நான் இந்த கங்கை நதியை கடக்க உதவுகிறேன்’ என்றானாம் குகன். அதை கேட்ட ராமன் புன்னகை தவழ, அந்த வார்த்தையை ஏற்றுக் கொள்கிறான்.
மிதிலையில் பிறந்து அயோத்தியில் வாழ்ந்த சீதை, அசோகவனத்தில் தவித்த போது தமிழ் பேசி ஆறுதல் கூறியவள், ராவணனின் சகோதரன் விபீஷணனின் மகள் திரிசடை தான். அதற்கு காரணம் அகத்தியர் தான் என்ற விளக்கம், நம்மை உற்சாகப்படுத்துகிறது.
நல்ல நோக்கத்தை உடனே நிறைவேற்றி விட வேண்டும்; இல்லாவிட்டால் அது நிறைவேறாமல் போய்விடும். தீய செயலை முடிந்தவரை ஒத்தி போட வேண்டும்; அதனால் அந்த தீய செயல் நிகழாமலேயே போய்விடும் என லட்சுமணனுக்கு அறிவுரை சொல்கிறான் ராமன்.
ராமனின் பண்பை பற்றி மரம், செடி, கொடிகள் தங்களுக்குள் சிலாகித்து பேசுவதாக வரும் காட்சியும், ராமனின் பாதுகைகள் அதை கேட்டு பெருமை அடைவதையும் படிக்கும் போது, ராமாயண காவியத்திற்குள் நாமும் ஒரு அங்கமாகி விட்டது போன்ற உணர்வு நிச்சயம் ஏற்படும்.
– எம்.எம்.ஜெ.,