ராமச்சந்திர கவிராயர், வரதுங்கராம பாண்டியன், பொய்யாமொழி புலவர், நையாண்டிப் புலவர், காளமேகப் புலவர், மதுரகவிராயர், ஒட்டக்கூத்தர், கம்பர், அவ்வையார் பாடிய, 37 தனிப் பாடல்களுக்கு வழங்கிய கதைகளின் தொகுப்பு நுால்.
பெரும்பாலான கதைகள் அறிவுரையாக எதிர்காலச் சந்ததியினருக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளன. ‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா’ என்ற பாடல் துவங்கி, யாரெல்லாம் வறுமையில் துன்பம் அடைவர் என அந்தகக்கவி வீரராகவர் வருந்திப் பாடிய பாடலுடன் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
கதைகளுடன் பொருத்தமான படங்கள் இடம் பெற்றுள்ளன. பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லாரும் படிக்க இயலும். பெரும்பாலான உரையாடல்களில், தொடர் நயம் இருப்பதைக் காண முடிகிறது. தங்கு தடையற்ற எளிய மொழிநடையால் புத்தகத்தை எடுத்தவர்கள் படிக்காமல் வைக்கமாட்டார்கள். கவிதையும், கதையும் கலந்து இலக்கியச் சுவை வெளிப்படுத்தும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்