வைணவர்கள் வளர்த்த தமிழ் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். ஆழ்வார்கள் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், வேதங்களுக்கு இணையாக உள்ளது என்று மதிப்பிட்டுள்ளார். நம்மாழ்வார் அந்தணரல்லாதவராக இருந்தும், அவரையே தலைமை ஆழ்வாராக வைணவர்கள் கொண்டாடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியம் தோன்ற பெரியாழ்வார் பாசுரங்கள் முன்னோடியாக அமைந்தன என்று மதிப்பிட்டுள்ளார். திருப்பாவையின் சிறப்பாக, தாய்லாந்தில் மன்னர் முடிசூடுதலின் போது பாடப்படுகிறது என்ற செய்தியும் தருகிறார்.
சமதர்மத்தைக் கூறும் ஆழ்வார் பாசுரங்களையும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இசைப்பா-, இயற்பா- தொகுதிகளையும் விளக்கியுள்ளார். சில பாசுரங்களின் அகப்பொருள் தத்துவங்களை விளக்கியுள்ளார்.
பெருமை சேர்க்கும் விதமாக, ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரைப் பகுதி அமைந்துள்ளது. பழகு தமிழ் நடை படிப்போருக்கு இன்பம் தரும் நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்து