கண்ணனைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட குறுங்காவியம். ‘ஸ்யாமா மாதவம்’ என்ற நுால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கவிஞர் சிற்பி மொழி பெயர்த்துள்ளார். கண்ணனை எதிர்வினையில் நிறுத்தி, குற்றங்களை உணர்ந்து தன்னிரக்கம் கொள்வதாகப் படைத்திருப்பது, புதுமையாக உள்ளது.
மூலச்சுவை குன்றாத வகையில், பாத்திர உரையாடல்களை உணர்வுப்பூர்வமாகத் தந்துள்ளார். கர்ணன், தேரோட்டி ஜெயத்ரன், திரவுபதி, ராதை, திருதராஷ்டிரன், அசுவத்தாமன், தருமன் ஆகியோர் முன் கண்ணன் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு உள்ளாவதைத் திறம்பட எழுதியுள்ளார்.
கீதையின் நாயகனான கண்ணன் போரில் வெல்வது என்பதை விட, மனத்தை வெல்வது வேண்டும். அதுவே மேலான உலகம் என்ற முடிவுக்கு வருகிறான். ராதைக்கு ஒரு கீதம், ராதையும் மாதவனும் பகுதிகள் நன்றாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்குறுங்காப்பியம், புதுமையையும், புரட்சியையும் வெளிப்படுத்துகிறது.
– ராம.குருநாதன்