நாட்டுக்காகப் போராடி, வீர மரணம் கண்ட வெண்ணிக் காலாடியின் வரலாற்று நுால். படிப்போர் மனதில் குறும்படமாக ஓடுகிறது. வெண்ணிக் காலாடிக்கும், குவளைக் கண்ணியைச் சேர்ந்த ஊர்க்காவலன் மகள் ஒப்பாச்சிக்கும் திருமணம், ஊரே கூடி மிக விமரிசையாக நடக்கிறது.
விழாவில், மன்னர் பூலித்தேவனும், நாச்சியாரும் பங்கேற்கிறார்கள். திருமண விருந்து மகிழ்ச்சி ஆரவாரத்திலும், நாட்டைப் பற்றிய கவலை நிலைநாட்டப்படுகிறது. நெற்கட்டும் செவலில் புதிய கோட்டை கட்டும்போது, பெண்களும் அதில் பங்கேற்க ஆர்வமாய் வருகிறார்கள். மகளிர் வேலை செய்ய வேண்டாம் என தடுக்கிறார் மன்னர்.
பூலித்தேவன் புலியைக் கொல்லுதல், மதுரை மீனாட்சியைத் தரிசித்தல், சிவகிரி பாளையம் மீது போர் தொடுத்தல், மெய்க்காப்பாளன் வீரேந்திரன், ஒப்பாச்சியுடன் போர்ப் பயிற்சி. நீர் காத்த அய்யனாரும் நீராவி முனிவரும், களக்காட்டுப் போர், நெல்லைச் சீமையில் வெண்ணிக் காலாடி, வேளாண்மை செய்தல், வாசுதேவ நல்லுார் கோட்டையில் ஆலோசனை என, பல விஷயங்கள் எழுதப்பட்டுள்ளன.
தமிழரின் வீரத்துக்கும், நாட்டுப் பற்றுக்கும் நற்சான்றாக இளைஞர் கையில் இருக்க வேண்டிய வரலாற்றுப் புதினம்.
– முனைவர் மா.கி.ரமணன்