உருது மொழியில் சிறுகதைகள் படைத்து, நாவலாசிரியராய், திரைக்கதை ஆசிரியராய், இயக்குநராய் புகழ் பெற்றவர் ராஜீந்தர் சிங் பேடி. உருது இலக்கிய உலகில், மிகச் சிறந்த படைப்பாளராக விருதுகளைப் பெற்றவர். அவரது 18 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, தமிழில் மொழிபெயர்த்துள்ளார் எஸ்.கனகராஜ். இயல்பான மொழி நடையில் அமைந்துள்ளது.
ஏழைக் குமாஸ்தா ஒருவர், கிழிந்த கோட்டைப்போட்டுக் கொண்டு அலைகிறார். அதற்குள், எப்போதோ வைத்த, 50 ரூபாய் கிடைக்கிறது. அதில், புதிய கோட் வாங்காமல் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்ய விரும்புகிறார்.
ஆனால், அவரது மனைவி அவருக்காக ஒரு கம்பளி கோட் தைக்க, துணியை வாங்கி வந்தாள் என முடிகிறது கதை. நடுத்தரக் குடும்பத்தின் ஆசைகளும், நிராசைகளும் இந்தக் கதையில் உணர்த்தப்படுகின்றன. கதைக் களமும் பெயர்களும் வேறு வேறாக இருந்தாலும், சொல்லப்படும் கருத்து, தமிழ் மக்களுக்கும் பொருந்தும்.
– முகிலை ராசபாண்டியன்