மொழி, தமிழ் இலக்கணம், கருத்துத் துளிகள் என்ற முப்பெரும் பிரிவுகளில், 117 தலைப்புகளில் மொழியையும் இலக்கணத்தையும் செறிவாகப் பதிவு செய்துள்ள நுால். தமிழில் 700 கோடிக்கும் மேற்பட்ட சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, வெறும் ஆய்வுக் கருத்தாக மட்டுமல்ல! நடைமுறையில் கணினி நிரல்களையும் உருவாக்கியுள்ளனர்.
எந்தவொரு தமிழ்ச் சொல்லையும் விதிகளுக்கு உட்பட்டு, கணினியால் பிரித்தறிய இயலும். எந்த ஒரு அடிச்சொல்லிலிருந்தும் அதனது லட்சக்கணக்கான திரிபு ஏற்ற சொற்களை, விதிகளுக்கு உட்பட்டு உருவாக்க முடியும்’ என்ற பதிவை, தமிழின் அடியும் முடியுமாக விளக்குகிறது இந்த நுால்.
தமிழ்மொழி தாழ்வானது என்ற தாழ்வு மனம் கொண்டவர்களையும், தமிழ்ப் பேச்சில், எழுத்தில் எந்தத் தவறும் செய்யலாம் என்ற மனப்போக்கையும் கண்டிக்கிறது. அங்கன்வாடியிலேயே ஆங்கிலத்தைத் திணித்து, தாய்மொழியாகிய தமிழைப் புறந்தள்ளும் இன்றைய ஆங்கில மொழி ஏகாதிபத்தியம், தமிழுக்கும் தமிழினத்திற்கும் எதிரானது என்னும் பதிவு, தாய்மொழி தமிழுக்குப் பலமாக அமைகிறது.
தமிழின் தொன்மை, தொடர்ச்சி, வளர்ச்சி ஆகியவற்றைத் தொல்காப்பியம் தொட்டு தற்காலம் வரை பதிவு செய்துள்ள இந்நுால், தமிழின் மொழியியலில் ஒலியியல், ஒலியனியல், உருபனியல், சந்தி, தொடரியல், பொருண்மையியல், கருத்தாடலியல், சூழல்சார் இலக்கணம், பயன்பாட்டு மொழியியல், பிற துறைசார் மொழியியல் போன்ற பிரிவுகளையும் சிறப்புற வழங்குகிறது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்