சென்னையைச் சுற்றி அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலங்களைப் பற்றிக் கூறுகிறது. பிறவியைக் கடக்க இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று வள்ளுவம் கூறுகிறது. அருள் பெற்ற அடியார்கள் பாடிய பாடலைப் பின்பற்றி திருத்தலங்களைப் பற்றி பாடல் எழுதி விளக்கம் தந்துள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் சொற்பொருள் விளக்கம் தனியே தரப்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூர், திருவலிதாயம், திருமுல்லைவாயில், திருவேற்காடு, திருமயிலாப்பூர், திருவான்மியூர் திருத்தலங்களும் இடம் பெற்றுள்ளன. தல வரலாறு, திருத்தல அமைப்பு, இறைவன், இறைவி பெயர், தல மரம், தீர்த்தம் முதலியன முறையாகக் குறிக்கப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தலத்திற்கும் நேரில் அழைத்துச் சென்று விளக்குவது போல தகவல்களைத் தருகிறது.
அகத்தியரின் தீராத வயிற்று வலியை தீர்த்தமையால் திருவான்மியூர் ஈசனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது என்ற தகவலை பதிவு செய்துள்ளது. வையகம் வாழ்க என்ற வாழ்த்தோடு நுால் நிறைவடைகிறது. பாடல் பெற்ற தலங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு துணை செய்யும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்