தமிழகத்தில் நிலவிய நீர் மேலாண்மையின் சிறப்பியல்புகளை, உரிய சான்றுகளுடன் எடுத்துரைக்கும் நுால். இலக்கியம், தொல்லியல் சான்றுகளை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. நுால், நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. துணை நின்ற ஆதார நுால்களின் விபரப் பட்டியல் பின்னிணைப்பாக தரப்பட்டுள்ளது.
முதல் இயலில், சங்க நுால்களில் காவிரி நதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் தேடித் தொகுக்கப்பட்டுள்ளன. இலக்கிய சான்றுகளுடன் பல தகவல்களை கொண்டுள்ளது. அடுத்து, தமிழகத்தில் பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நீர் மேலாண்மை விபரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தொல்லியல் சான்றுகள், ஆதாரமாகத் தரப்பட்டுள்ளன.
கல்வெட்டு, செப்பேடு, பழங்காசு, ஓலைச்சுவடியில் உள்ள செய்திகளை ஆராய்ந்து தெளிந்து தொகுத்து எழுதப்பட்டுள்ளது. அடுத்து, தமிழக கலைப் படைப்புகளில் நீர் பயன்பாடு மற்றும் மேலாண்மை குறித்து ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பாக சடங்கு, வழிபாடு, திருவிழா என, சமூக செயல்பாடுகளை ஆராய்ந்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழரின் நீர் மேலாண்மை சிறப்பை, வரலாற்றுப்பூர்வமாக நிறுவும் நுால்.
– மலர்