பெருங்காப்பியங்கள் பற்றி எளிதில் புரிந்து, அறத்துடன் வாழும் சிந்தனையை துாண்டும் வகையில், உரைநடை வடிவில் எழுதப்பட்டுள்ள நுால்.
ஐம்பெருங்காப்பியங்களின் கதைச் சுருக்கம், ஆசிரியர் வரலாறு, பாத்திரப் படைப்புகள், சிறப்பு அம்சங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் எழுந்த காப்பியங்களிலும் புராணங்களிலும் வழிபடு தெய்வத்தையோ, ஏற்புடைய கடவுளையோ, வணங்கி நுாலைத் துவங்குவர்.
சிலப்பதிகாரத்தில், இம்முறையைக் காண முடியவில்லை. மாறாக, திங்கள், ஞாயிறு, மழை, பூம்புகார் இவற்றினை வாழ்த்தி துவங்கும் புதுமையை பதிவு செய்துள்ளார்.
மண நுால் எனப் போற்றப்படும் சீவக சிந்தாமணியில், பண்பு நலம் வாய்ந்த மக்கள் பலரைப் படைத்துள்ளார் திருத்தக்கத்தேவர். செல்வத்தின் சிறப்பு, காதல், கொல்லாமையின் சிறப்பு, குடியாட்சியின் மாண்பு எனத் திருக்குறள் கருத்துக்களை எடுத்தாண்டுள்ளார். வளையாபதியின் கதைச் சுருக்கமும் இணைக்கப்பட்டுள்ளது. குண்டலகேசியில் கிடைத்துள்ள பாடல்கள் உரையுடன் உள்ளன. ஐப்பெரும் காப்பியங்கள் குறித்து, அரிய செய்திகளை அறிந்து கொள்ள உதவும் நுால்.
– புலவர் சு.மதியழகன்