இறந்தவனை உயிர்ப்பித்த மகானைக் கண்டு, சுற்றி நின்றவர்கள் திகைத்துப் போயினர். தாங்கள் பார்ப்பது கனவா, நனவா எனத் தெரியாமல் மயங்கி நின்றனர். பின்னர், பக்திப் பரவசத்துடன் சுவாமிகளின் பாதம் பணிந்து வணங்கினர். அந்த அளவிற்கு, மரணத்தையே மாற்றி அமைக்கும்
மகத்தான ஆற்றல் மிக்கவராய் விளங்கினார் சித்த புருஷர் ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள்.
பக்கத்தில் உள்ள திருத்துறையூரில் இருந்து, மூன்று வண்டிகளில் அரிசி, உணவுப்பொருட்கள் வள்ளலாரின் சித்தி வளாக மாளிகைக்கு வந்தன. அடிகளார் தன் கனவில் வந்து, அரிசி முதலிய உணவுப் பொருட்கள் வேண்டுமென்று கேட்டதாகவும், அவற்றை கொண்டு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளை உணவுக்கு என்ன செய்வது என்று பணியாளர்கள் வருந்திக் கொண்டிருந்த நேரத்தில், ராமலிங்க அடிகளாரின் அற்புத ஆற்றலை எண்ணி ஆச்சரியப்பட்டனர். குரு பரம் சிவேந்திரர், ‘தங்களை தரிசனம் செய்ய வேண்டும்’ என்று சொன்னதும், பதை பதைத்தார் மைசூரு அரண்மனையில் இருந்த சதாசிவர். உடனே, சமஸ்தானப் பதவியைத் துறந்து, குருவைத் தேடி ஓடி வந்தார்.
‘ஊரார் வாயை அடக்கக் கற்ற நீ, உன் வாயை அடக்கக் கற்கவில்லையே. முதலில் உன் வாயை அடக்கு’ என்றார் சற்றே கோபத்துடன். அந்தக் கணத்தில், குருவின் பாதத்தில் வீழ்ந்து வணங்கிய சதாசிவ பிரம்மேந்திரர், மவுன யோகியாய் மாறினார்.
இப்படி நம்முடன் வாழ்ந்து மறைந்த 18 சித்தர்களில், 12 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் பட்ட துன்பங்கள், அதைத் தாண்டி, மக்களுக்காக அவர்கள் செய்த தியாகங்கள், பலன்களை எளிய நடையில் விளக்கியுள்ளார் ஆசிரியர் ரமணன்.
சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது, இந்த சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொள்ளும் வரை என்ன பாடுபடுத்தியது, ஏற்றுக் கொண்ட பின் எப்படி கொண்டாடியது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மனிதனாக பிறந்து, மகானாக மாறி சித்தராய் மறைவது, சிலருக்கு மட்டுமே கிடைத்த வரம். அப்படி வரம் பெற்றவர்களை தொகுத்து, நமக்கு வரமாய் தந்துள்ளார் ஆசிரியர்.
–- எம்.எம்.ஜெ.,